அமித்ஷாவை சந்தித்து விட்டு நேர்காணலுக்கு வந்த ஜெயலலிதாவின் மகள்.அம்மாவின் வாரிசு நான் என்ற உயில் உள்ளது எனக் கூறியதால் பரபரப்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ள நிலையில், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் மனு கொடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்ட வாரியாக இந்த நேர்காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நேர்காணலுக்கு வந்த ஒரு பெண்ணால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொள்ளும் அம்ருதா (என்கிற ஜெயலட்சுமி), ஜெயலலிதா போன்றே உடை அணிந்து அதிமுக அலுவலகத்திற்கு நேர்காணலில் பங்கேற்க வந்தார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட தான் விருப்ப மனு அளித்திருப்பதாக அவர் கூறினார்.
ஆனால், அவரை அங்கிருந்த அதிமுகவினர் அலுவலகத்திற்குள் விடாமல் துரத்தி அடித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்மாவின் வாரிசு நான் தான், அதற்கான உயில் ஆதாரம் என்னிடம் உள்ளது. அமித் ஷாவை சந்தித்துவிட்டுத்தான் வந்தேன், என்னை ஏன் துரத்தினார்கள்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

