தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி செய்துள்ள நிலையில் விவசாயின் 86 தங்க காசுகளையும் கைப்பற்றிய வட்டாட்சியர்.
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன.
இதுபற்றி தகவல் பரவிய நிலையில், 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார்.
திருப்பத்தூரை சுந்தரம்பள்ளி பகுதியில் தனது விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி சமன் செய்யும் பணியில் ஆதவன் என்பவர் ஈடுபட்டார். அப்போது ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன.
இதையடுத்து, அவர் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், நிலத்தில் புதையல் கிடைத்த தகவல் பரவியது. விஏஓ விசாரணை நடத்திய நிலையில் அது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ஆதவன் வசமிருந்த 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
1878-ம் ஆண்டு இந்திய புதையல் (Treasure Trove) சட்டம், நமக்குச் சொந்தமான நிலத்தில் புதையல் கிடைத்தால் அது யாருக்குச் சொந்தம் என்பதை குறிப்பிடுகிறது.
நிலத்தில் புதையல் கிடைத்தால் உடனே அதை மாவட்ட ஆட்சியர் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அதை மறைத்து வைத்தல், விற்பனை செய்வது அல்லது அறிவிக்காமல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை அரசுக்குத் தெரிவிப்பது என்றால் அரசாங்கம் உடனே அதை பறிமுதல் செய்துவிடும் என்று அர்த்தமல்ல. ஆனால், யார் உரிமையாளர் என்பதைத் தீர்மானிக்கும் வரை சட்டம் வெளிப்படைத்தன்மையைக் கோருகிறது.
தனியார் நிலத்தில் புதையல் கிடைத்தால், நிலம் உங்களுக்கே சொந்தமானதாக இருந்தால், அதில் கிடைக்கும் புதையலும் உங்களுடையது தான். உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள், தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி செய்துள்ளன. ஆனால், அந்தப் புதையலுக்கு உரிமை கோரும் உண்மையான வாரிசுகள் யாரும் முன்வராத நிலைமையில் மட்டுமே, இந்த உரிமை முழுமையாக நில உரிமையாளருக்கு சென்று சேரும்.
உங்கள் நிலத்தில் வேறொருவர் புதையலைக் கண்டுபிடித்தால், சட்டம் உரிமையை சமமாகப் பகிர்கிறது.
புதையலின் 50% நில உரிமையாளருக்கும், மீதமான 50% அதை கண்டுபிடித்த நபருக்கும் வழங்கப்படும்.
அதுவே, அரசு நிலத்தில் புதையல் கிடைத்தால், காடுகள், ரயில்வே, பொதுப்பணித் துறை நிலங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான நிலங்களில் புதையல் கிடைத்தால் அது முழுமையாக அரசுக்கே சொந்தம். அதே நேரத்தில், அதனை கண்டுபிடிப்பவருக்கு அரசு வெகுமதி வழங்கலாம். ஆனால், அது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

