Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கமல் தேர்தலுக்கு ரெடி தமிழகம் சுற்றிவர வாகனம் தயார்.

கமல் தேர்தலுக்கு ரெடி தமிழகம் சுற்றிவர வாகனம் தயார்.

0

கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: தமிழகத்தை வலம் வர வாகனம் தயார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கும் முன்னதாக, தலை நிமிரட்டும் தமிழகம் என்று பிரசார வாகனத்தையும் தயார் செய்து துரிதமாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு துருவ இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக திமுக மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் வகையில் தீவிரமாக களம் காண திட்டமிட்டுள்ளன.
திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அதே போல, அதிமுகவும் கூட்டணியை உறுதி செய்துவிட்டன. இரு கட்சிகளும் கூடுதலாக பலமான இரு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். யாரையும் கூட்டணியில் சிதறவிட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.
திமுக ஒரு படி முன்னே சென்று 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது.
இந்த சூழலில்தான், திராவிடக் கட்சிகளை விமர்சித்துவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்கு ஆயத்தமாவதில் வேகம் காட்டியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் விளக்கு சின்னத்தில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும் குறிப்பிடும்படியாக வாக்குகளைப் பெற்றது.
கமல்ஹாசன் ஒரு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக்கும் பணியிலும் துரிதமாக செயல்பட்டுவருகிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 100 சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மநீம கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கமல்ஹாசன் மநீம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய புகைப்படங்களை மக்கள் நீதி மய்யம், சீரமைப்போம் தமிழகத்தை என்று ஹேஷ்டேக் உடன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. அதோடு, கமல்ஹாசன் வருகிற சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பிரசார வாகனத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
கமல்ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனம் முழுவது சிவப்பு வண்ணத்தில் உள்ளது. அதில் தலை நிமிரட்டும் தமிழகம் என்ற வாசகமும் மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே! என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதோடு, நமது சின்னம் டார்ச் லைட் என்று டார்ச் லைட் சின்னம் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழக்கம் தலை நிமிரட்டும் தமிழகம் என்பதாக இருக்கும் என்பதாக இருக்கும் என்று தெரிகிறது.
தேர்தல் நெருங்கி வருகிறது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறாரே என்று பேசியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்றத் தேர்தலுக்கும் ஆயத்தமாகும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.