தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தோறும் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 27 ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த நிலையில், கரூர் பரப்புரை நாட்டையே உலுக்கும் விதத்தில் அமைந்தது.
இந்த பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதே போல் திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களிலும் விஜய்க்கு எதிராக தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், ’39 அப்பாவி உயிர்களை பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்ற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.