Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் எங்களுக்கு சாதாரண விஷயம். திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த்.

0

'- Advertisement -

அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை

விஜய் பிரச்சாரத்திற்கு கூட்டம் வருவது எங்களுக்கு சாதாரண விஷயம்

 

திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

 

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டு நிறைவடைந்து 21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். இதனை முன்னிட்டு திருச்சி மணப்பாறை சாலையில் முள்ளிப்பாடி என்ற இடத்தில் 73 அடி உயர கொடிக்கம்பத்தில் தேமுதிக கட்சி கொடி ஏற்றப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் அங்கு மிக பிரம்மாண்டமான கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த். கூறியதாவது:-

தேமுதிக 21ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தமிழகம் முழுவதும் இது போல் கொடியேற்றி தேமுதிகவினர் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரி 9ம் தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் 75 அடி உயர கொடியை இன்று ஏற்றி வைத்துள்ளனர். இங்கு 73 அடி உயரக் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி உள்ளது கேப்டனின் நினைவாக அவரது 73 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தேமுதிக நிலைப்பாடு என்ன, யாருடன் கூட்டணி என்ற உங்கள் அனைவரின் ஒட்டு மொத்த கேள்விக்கும் ஜனவரி 9 ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்.

ஒவ்வொருவரின் ஸ்டைல் அப்படி அதற்கு நாம் கருத்து கூற முடியாது நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய இடத்தில் யாரும் இல்லை.நாம் யாருக்கும் அறிவுரை சொல்லும் இடத்திலும் இல்லை .

 

விஜய் ஏற்கனவே இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார். பொதுவெளியில் பிரச்சாரம் செய்வேன் எனக் கூறியுள்ளார் அந்த வகையில் நேற்று திருச்சி அரியலூர் பெரம்பலூர் வந்தார்கள், காலதாமதம் ஏற்பட்டது எனக் கூறினார்கள் நான் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து சுற்று பயணத்தில் இருந்து வருவதால் அது குறித்து நான் கேள்விப்பட்டேன். விஜய் தற்பொழுது ஆரம்பித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

20 வருடங்களுக்கு முன்பு ரீவைண்ட் செய்து பாருங்கள் இதே தான் அப்பொழுதும் நடந்தது. 20 வருடம் ஆகிவிட்டதால் உங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் நாங்கள் மறக்கவில்லை. எல்லாமே எதிர்நீச்சல் போட்டு வந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது ஒரு சாதாரண மனிதனுக்கே உள்ளபோது. இது அரசியல் கட்சி பெரிய ஆளுமைகள் ஆட்சி செய்த பூமி அப்படி இருக்கும் பொழுது புதிதாக வருபவர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருக்கும். எதிர்நீச்சல் போட்டு ஜெயித்தவர் தான் நமது கேப்டன். அவர்தான் அதற்கு எடுத்துக்காட்டு. திரைத்துறையாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் சவால்களை முறியடித்து வெற்றி பெறும் போது தான் அது மக்களால் அங்கீகரிக்கப்படுகிறது.

திரை உலகில் இருந்து வருபவர்கள் பிரபலமானவர்கள். சாதாரண மனிதனுக்கும் நடிகனாக வருவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களை திரையில் மட்டுமே பார்த்து பழகிய மக்கள். விஜய் சினிமாவில் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது அவர் உச்ச நட்சத்திரம் எனும் போது அவருக்கான ரசிகர்கள் மிக அதிகமாக இருப்பார்கள். ஆனால் எங்களுக்கு இது சாதாரணமாக தெரிகிறது. நாங்கள் கேப்டனுடன் வளர்ந்தவர்கள், அவரைப் பார்த்தவர்கள், எங்களுக்கு இது பெரிதாக தெரியவில்லை. அவர்கள் எப்படி இதை கொண்டு செல்கிறார்கள் என்பதை பொறுத்து தான் தெரியவரும்.

 

 

விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் பொழுது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்தால் அவரே மைக்கில் ஆம்புலன்ஸ் வருகிறது வழி விடுங்கள் என கூறுவார். எங்கள் தொண்டர்கள் வழி விட்டு ஆம்புலன்சை அனுப்பி விடுவோம். இதை நாங்கள் மனிதநேயத்துடன் செய்வோம்.

தற்பொழுது அரசியல் கட்சி கூட்டங்களில் கூட்டம் அதிகமாக உள்ளபோது காவல்துறையினர் மாற்று வழியில் ஆம்புலன்சை செல்ல வலியுறுத்த வேண்டும் , ஏன் கூட்டத்தில் புகுந்து தான் வர வேண்டுமா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என தெரிந்தும் அதற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அது இடையூறு தான். ஆனால் நாங்கள் மனிதநேயத்துடன் அதை எடுத்துக் கொள்வோம் ஆனால் எல்லாரும் அப்படி எடுத்துக் கொள்வார்கள் என கூற முடியாது.

காவல்துறையினர் தான் முன்கூட்டியே திட்டமிட்டு வேறு மாற்று பாதையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேர்தல் பிரச்சாரம் என செல்லவில்லை உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நடைபெறுகிறது.

 

அதேபோல் காலை நேரத்தில் எங்கள் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ‌ நாங்கள் ராஜ்யசபாவை மட்டுமே போக்கஸ் செய்வது கிடையாது. எங்களது கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்த தேர்தலுக்கு தயாராவது குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் . பூத் கமிட்டி அமைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் பி எல் 2 போட்டு முடித்துள்ளோம். நிர்வாகிகள் கூட்டம் தேர்தலை எப்படி சந்திப்பது என்ற திசையில் நாங்கள் பயணித்துக் கொண்டுள்ளோம். விஜய் கேப்டனை அண்ணன் என்று சொல்கிறார். நாங்கள் அவரை தம்பி எனக் கூறுகிறோம். எங்களைப் பொறுத்தவரை விஜய் தம்பி தான் வாழ்த்துக்கள் அவர் நன்றாக வரட்டும்.

 

சினிமாவிலும் பலர் விஜயகாந்தை பயன்படுத்துகின்றனர். விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து , கட்சி சொத்து மட்டுமல்ல தமிழக மக்களின் சொத்து. கேப்டன் இருந்தபோது திரை உலகை எப்படி காப்பாற்றினார் என்பது ஒட்டுமொத்த திரையுலகில் இருப்பவர்களுக்கும் தெரியும். அவர்கள் உரிமையுடன் கேப்டன் படத்தை போடுகின்றனர் அதை நான் நிச்சயம் தடுக்க மாட்டேன். அவர் திரைதுறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். கேப்டன் எங்கள் சொத்து மட்டுமல்ல அவர் தமிழகத்தின் சொத்து என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

.தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமான் மற்றும் விஜய் புதிதாக வந்துள்ளார்கள். பார்ப்போம். இன்னும் ஆறு ஏழு மாதங்கள் உள்ளது பல்வேறு விதமான மாற்றங்கள் வரலாம். இதுதான் அணி என தற்போது கூற முடியாது. யார் யாருடன் சேரப் போகிறார்கள் எந்த அணி நிறைவான முழுமையான அணி என்பதை தற்போது கூற முடியாது.

 

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்..

 

இந்த நிகழ்வுகளில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.