உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மாயமானார்.
சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லையென்றதும், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்திலுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுமியின் தடயமே தெரியாமல் போன நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைத்த நிலையில் சிறுமியின் சடலம் மிதப்பதை கண்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனை அறிக்கையில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் மற்றும் 17 வயது சிறுவன் மீது சந்தேகம் எழுந்த நிலையில் இருவரையும் கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் அந்த இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 30 வயது பெண் ஏற்கனவே திருமணமாகியவர். ஆனால் அவருக்கு 17 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற நாளில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் வெளி ஊருக்கு சென்றிருந்ததை பயன்படுத்தி, அவர் தனது 17வது கள்ளகாதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், 6 வயது சிறுமி அந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
உல்லாசமாக இருந்த அவர்களை நேரில் பார்த்த சிறுமி, இது பற்றி தந்தையிடம் சொல்லப்போவதாக கூறியதும், பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் கோபத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் சடலத்தை சாக்குப் பைக்குள் அடைத்து அந்தக் கிணற்றில் வீசியுள்ளனர். இந்த கொடூரமான கொலை சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.