உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை . திருச்சி கலெக்டர் எச்சரிக்கை.
திருச்சி மாவட்ட குவாரிகளில் உரிமம் பெறவும், கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லவும் மின்னணு அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரிப்பணிகள் நடைபெறுகின்றன. குவாரிகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக குத்தகைதாரா்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச்சீட்டை இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது.
வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களைக் கண்காணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிட கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதைத் தடுத்திடவும் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டு இணையதளம் வாயிலாக வழங்கும் நடைமுறை ஏப்ரல் 21 முதல் அமலுக்கு வந்துள்ளது.
எனவே குவாரி குத்தகை கோரும் விண்ணப்பங்கள் மற்றும் சுரங்க நிலுவைத் தொகை சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை வரும் 28 தேதி முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் குத்தகைதாரா்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குட்பட்டு குவாரிப்பணி மேற்கொள்ளவும், வாகன ஓட்டுநா்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச்செல்லும்போது உரிய அனுமதி சீட்டும், கிரஷரிலிருந்து எம்-சாண்ட், ஜல்லி, சிப்ஸ் போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது உரிய போக்குவரத்து நடைச்சீட்டும் பெற வேண்டும், அவற்றை வாகனத் தணிக்கையின்போது வைத்திருக்க வேண்டும்.
உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார் .