Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாணவர்கள் மீது அண்டை மாவட்ட எம்.பி. க்கு இருக்கும் அக்கறை, திருச்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவுக்கு இல்லாமல் போனது ஏன்? திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அடுக்கடுக்கான கேள்வி .

0

 

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

இன்று திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் வழங்கினார்கள்.

திருச்சியில் நடைபெற்ற அரசு சார்பு விழாவிற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்காதது ஏன்?

திருச்சி மாணவர்கள் மீது அண்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் அக்கறை, திருச்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இல்லாமல் போனது ஏன்?

நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஆயிற்று. இந்நாட்களுக்குள் நாடாளுமன்ற கூட்டமும், இந்தியாவிற்கான பட்ஜெட் கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே, வாக்குறுதிகள் கொடுத்தபடி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மிகவும் பின்தங்கிய தொகுதியான கந்தர்வகோட்டையின் பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளின் தொடக்க நிலை என்ன?

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை மற்றும் திருச்சி துவாக்குடி பால் பண்ணை சர்வீஸ் ரோடு பிரச்சினைகளின் தீர்வுகளுக்கான முன்னெடுப்புகள் எந்த அளவில் உள்ளது?

திருச்சியில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. திருச்சியில் பெருகிவரும் போதை மருந்துகள் விற்பனைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை அறிவீர்களா?

கடந்த 15 ஆண்டுகளாக திருச்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மத்தியில் ஆளுகின்ற அரசிற்கு எதிரணியில் இருப்பதால் திருச்சியில் எந்த விதமான பொருளாதார மேம்பாடுகளும் ஏற்படவில்லை. அதனால் தனிமனித வருமானம் என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அதே துர்பாக்கிய நிலை தற்பொழுதும் இருக்கக் கூடாது என்பதுதான் என்னைப் போன்ற திருச்சிவாசிகளின் எண்ணம்.

ஏதோ சில நிகழ்ச்சிகளில் சம்பிரதாயமாக கலந்து கொள்வதும், விமான நிலையத்திற்கு வெளியே பேட்டி கொடுப்பதும் மட்டுமே திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் பணியாக இருந்து விடக் கூடாது.

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட, மாமன்ற, ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் கலந்து பேசி திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை முழு வீச்சுடன் செயல்படுத்த வேண்டும்.

ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தலிலே வென்றாலும் தோற்றாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கான எங்களது பணி என்றும் தொடரும்.

என அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்
ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.