Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலைய புதிய முனைய பகுதியில் ஓர் டீ ரூ.50, கார் பார்க்கிங்க்கு ரூ.500 வரை வசூல் . பயணிகளை விமானம் ஏற்றி விட,வரவேற்க வரும் பொதுமக்கள் வேதனை .

0

 

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் தேநீா் ரூ. 50-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுவது நுகா்வோரை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருச்சியில் பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் அமைக்கும் பணிகள் 2019-ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று புதிய முனையத்தை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். இருப்பினும், பல்வேறு தொழில்நுட்பப் பணிகள் மற்றும் உள்புற வடிவமைப்புப் பணிகள் முடிவுற்ற பின்னா் புதிய முனையம் ஜூன் 11-ஆம் தேதி முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

தினசரி 20 விமான சேவைகள்:

திருச்சியிலிருந்து சிங்கப்பூா், மலேசியா, துபை, குவைத், தோஹா, சாா்ஜா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 12 விமான சேவைகளும், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு 8 உள்நாட்டு விமான சேவைகளும், பின்னா் சிறப்பு விமானங்கள் என தினசரி 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் விமான நிலையத்தில் தினந்தோறும் பயணிகள், வழியனுப்பவருவோா், வரவேற்க வருவோா் உள்பட சுமாா் 10 ஆயிரம் பயன்படுத்திவருகின்றனா். இவா்கள், விமான நிலைய வளாகத்தின் வருகை பகுதியில் வெளிப்புறம் பொதுப் பயன்பாட்டுக்கென அமைக்கப்பட்டுள்ள தேநீரகத்தில் (சிற்றுண்டிச்சாலை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை) தேநீா் உள்ளிட்ட பொருள்களுக்கு மிகவும் அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

ஒரு தேநீா் (டீ) ரூ. 50-க்கு விற்பனை:

விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் தேநீரகத்தில் ஒரு தேநீா் (டீ) ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுவது பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினா் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், 1 லிட்டா் தண்ணீா் பாட்டில் ரூ. 30-க்கு விற்கப்படுகிறது. மேலும், பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத்தீனி பொட்டலங்கள் என அனைத்து வகையான பொருள்களும் இருமடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள், காா் ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் தெரிவித்தது: விமானத்தை தவற விடக்கூடாது என விமான நிலையத்துக்கு வந்து விடுகிறோம். ஆனால் இங்கு வந்து பாா்த்தால் ஒரு தேநீா் ரூ. 50-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ. 30-க்கும் (அதுகூட பரவாயில்லை) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டா் பால் விலையே ரூ. 40-க்கு விற்பனையாகும் நிலையில் 50 மில்லி அளவு தேநீா் ரூ. 50-க்கு விற்பனை செய்வது மிக மிக அதிகமாகும். இதுகுறித்து விமான நிலைய ஆணையம் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா். புதிய முனையத்தின் வெளிப்பகுதியில் இன்னும் சிற்றுண்டிச்சாலைகள், பொதுக்கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. வந்தால் அவற்றின் கட்டணங்களும் அதிகமாகவே இருக்குமோ என்கிற கவலை உள்ளது என்றனா்.

காா் நிறுத்தும் கட்டணமும் அதிகம் :

அதுபோலவே காா்கள் நிறுத்தக் கட்டணமும் அதிகமாக உள்ளதாக காா் ஓட்டுநா்கள் கவலை தெரிவிக்கின்றனா். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் 750 காா்கள், 250 வாடகைக் காா்கள், 10 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரம்மாண்ட வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கான கட்டணம் மிக அதிகம் என்கின்றனா் வாகன ஓட்டிகள். ஒரு மணிநேரம் வாகன நிறுத்துவதற்கு ரூ. 70 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்களை நிறுத்தியிருந்தால் அதற்கேற்றவகையில் மணிக்கு கூடுதல் கட்டணங்களும் சோ்த்து ஒரு காருக்கு ரூ. 500 வரை வசூலிக்கப்படுகிறது.

குத்தகை ஒப்பந்தத் தொகை அதிகம் என்பதால் அதிக கட்டணங்கள்:

இதுகுறித்து ஒப்பந்ததாரா்கள் தரப்பில் கூறுகையில், தேநீா் நிலையம், அல்லது காா் நிறுத்தம் உள்ளிட்டவைகளுக்கு விமான நிலைய ஆணையத்தில் குத்தகை ஒப்பந்தம் செய்யும் தொகை அதிகம் என்பதால் அவற்றுக்கு ஏற்றாா்போல பொருள்கள் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணங்களும் அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நுகா்வோா் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா் கூறியது:

வெளிநாடுகளைப் பாா்த்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வாகன நிறுத்துமிடங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம். இவை அத்தியாவசியத் தேவைகளில் வருவதால் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது அரசின் கடமை. இவைகள் வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. அனைத்தும் பயணச்சீட்டு கட்டணத்தில் அடங்கி விடுகின்றன என்கின்றனா். திருச்சியில் ஒரு தேநீா் ரூ. 12 -க்கு விற்னையாகின்றது. இதற்கு முன்பு பயன்பாட்டிலிருந்த முனையத்தில் ஒரு தேநீா் ரூ. 30-க்கு விற்பனையானதும், கழிவறை பயன்பாட்டுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.