கோடைகால நோய்களுக்கான
சிறப்பு சித்த மருத்துவ முகாம்.சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தகவல்.
திருச்சி, அருகே பெருகமணியில் ஏப்ரல் 20 ஆம் தேதி, கோடைகால நோய்களுக்கான இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலரும் மருந்து ஆய்வாளருமான எஸ். காமராஜ் தெரிவித்திருப்பது:-
திருச்சி மாவட்டம், பெருகமணி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த சிறப்பு சித்த மருத்துவ முகாமை, மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தொடங்கி வைக்கிறார். காலை 9 முதல் பிற்பகல் 4 மணிவரை முகாம் இடைவேளையின்றி நடைபெறும். இதில்,பெண்களுக்கான கருப்பை கட்டி, சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு, மகளிருக்கான இயற்கை பிரச்னைகள், மூட்டுவலி, தோல்நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக கோடைகாலங்களில் ஏற்படும் நோய்களுக்கான அனைத்து வகையான மருந்துகளும் வழங்கப்படும். முகாமில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்த மருந்துகள் கண்காட்சியும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
ஆங்கில மருந்துகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து உட்கொண்டு வருவோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும் இம்முகாமில் பங்கேற்போருக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம், கபசுர குடிநீர் சூரணம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.