Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயிலில் நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

0

'- Advertisement -

 

Ad banner

மகாசிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய கண்விழித்து சாமிதரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரி

ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்தசி சந்திக்கும் நாள் இரவு மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோவில்களில் 4 கால சிறப்பு பூஜைகளும், சில கோவில்களில் 6 கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய கண்விழித்து சாமிதரிசனம் செய்தனர்.

அதன்படி, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் மகா சிவராத்தியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சோபசார தீபங்கள் காட்டி பூஜைகள் நடைபெற்றது. கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் நான்கு சாமங்களிலும் சிவபூஜை நடத்தினர். இதில் விரும்புவோருக்கு சிவதீட்சை அளிக்கப்பட்டது.

ருத்ரயாகம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் காலை லட்சார்ச்சனை நடைபெற்றது. மகா சிவராத்திரியான நேற்று இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக ஒவ்வொரு கால பூஜைக்கும் பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவராத்திரியை விளக்கும் வகையில் வேடன் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவிலில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதுபோல் உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அத்துடன் முதற்கால பூஜை முடிந்ததும் ருத்ரயாகம் நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் சிவனடியார்கள் சிவபூஜை செய்தனர். கோவில் வளாகத்தில் மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் காசி விசுவநாதர் கோவில் ஆகியவற்றில் சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கைலாச நாதர் கோவில்

மேலும் பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை 6.30 மணி, இரவு 9 மணி, இரவு 11 மணி, நள்ளிரவு 1.30 மணி, அதிகாலை 3.30 மணி, அதிகாலை 4.30 மணிக்கு முறையே 6 கால பூஜைகள் நடைபெற்றன. திருச்சி சுப்பிரமணியபுரம் புதுக்கோட்டை சாலையில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் சன்னதியில் சுவாமிக்கு 4 காலமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.