திருச்சி மாநகர் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்பு பால் பொதுமக்கள் அவதி . தூக்கத்தில் உள்ளாரா மாநகராட்சி ஆணையர் பொன்மணி
திருச்சி மாநகர் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்பு பால் பொதுமக்கள் அவதி .
தூக்கத்தில் உள்ளாரா மாநகராட்சி ஆணையர் பொன்மணி .
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் திருச்சியின் மிக முக்கியமான பகுதி ஆகும். சத்திரம் பேருந்து நிலையம் முன்னேறிய அளவிற்கு அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் முன்னேறாமல் பெரும் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது . பாதாசாரிகள் நடக்க முடியவில்லை. வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்த முடியவில்லை.இரு சக்கர வாகனங்களை கூட சாலை ஓரத்தில் நிறுத்த முடிவதில்லை . இதனால் அந்த பகுதிக்குள் செல்லும் பொது மக்கள் போன மாதிரியே உயிருடன் அல்லது நல்ல கை கால்களுடன் வெளியே வந்தாலே ஆபூர்வம். இதெற்கெல்லாம் காரணம் தரைக்கடைகளும், தள்ளு வண்டி கடைகளும் தான். சமிபத்தில் ஒரு உணவக கடையின் முன்பகுதியை ஆக்கிரமித்து தள்ளு வண்டி கடைகாரர்கள் பெரும் பிரச்சனை பண்ண, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சமீபத்தில் தான் கோர்ட் உத்தரவுப்படி பல்லாண்டுகாலமாக என்.எஸ்.பி ரோட்டில் சில்லறை மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் முன்பு ஆக்கிரமித்து வந்த தரைக்கடை தள்ளுவண்டி கடைகள் மற்றும் பர்மா பஜார் கடைகள் அகற்றப்பட்டது. தரைக்கடைகளுக்கு ஹோலி கிராஸ் கல்லுரி அருகே மாற்று இடம் தரபட்டது. இதனால் என்.எஸ்.பி ரோடு பகுதியே இப்போது அழகாக காட்சி அளிக்கிறது. அதேபோல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இதனால் சகஜமாக நடமாட முடிகிறது. இதில் முக்கியமான விசயம் என்னெவென்றால் பல்லாண்டுகள் ஆண்ட அரசியல்வாதிகளோ, பல ஆண்டுகள் பதவி வகித்த அரசு அதிகாரிகளோ இதனை செய்யவில்லை. கோர்ட் உத்தரவுப்படி தான் அவர்களை அகற்ற முடிந்தது.

அங்கே பிரச்சனை ஓய்ந்த நிலையில் இப்போது சத்திரம் பேருந்து நிலைய பகுதியிலும் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகளால் தினம் தினம் பிரச்சனை அதிகமாகி கொண்டே போகிறது. இது சம்பந்தமாக புகார் போனாலும் மாநகராட்சி அதிகாரிகளோ, அல்லது காவல்துறை அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், தள்ளுவண்டி போட்டிருப்பதும், தரைக்கடைகள் வைத்திருப்பதும், பெரு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கடைகள் முன்பு தான். இதனால் அந்த பெரு மற்றும் சில்லறை வியாபாரிகள் கடைக்கு பொதுமக்கள் போக முடியாத அளவிற்கு பெரும் இடைஞ்சலாக இருந்து வருகின்றனர். குறிப்பாக தள்ளுவண்டி வியாபாரிகள். அதுவும் சத்திரம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சித்ரா காம்ப்ளக்ஸ், ஜெயதுர்கா காம்ப்ளக்ஸ், மெயின்கார்டு கேட் வாட்டர் டேங், புனிதா வளனார் கல்லுரி வணிக வெளி வளாகம் ஆகிய பகுதிகளில் எல்லாம் தள்ளுவண்டி தரைக்கடை வியாபாரிகளால் பெரு மற்றும் சில்லறை வியாபாரிகள் ரொம்பவே நொந்து போகிறார்கள். சித்ரா காம்ப்ளக்ஸ் வாசலையே ஆக்கிரமித்து விட்டார்கள். அந்த பகுதியில் டூ வீலரையே நிறுத்த முடியவில்லை. மீறி நிறுத்தினால் மொத்தமாக வந்து தகராறு செய்கிறார்கள். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. எத்தனை மாநகராட்சி ஆணையர்கள் வந்தாலும் அவர்களை எல்லாம் ஒன்று செய்ய முடியவில்லை என்பது தான் மிக வேதனையான விசயம்.
இந்த நிலையில் தான் திருச்சி திமுக அயாக அணி செயலாளர் இப்ராம்சா புனித வளனார் கல்லூரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், புதிதாக ‘அல்-மதினா’ உணவகம் ஒன்று. திறந்தார் சுமார் இரண்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த இந்தக் கடையின் முன் பகுதியை ஆக்கிரமித்து, சிலர் தள்ளுவண்டி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். தற்போது புதிய உணவகம் தொடங்கப்பட்டு இயங்கி வரும் நிலையிலும், அங்கிருந்த தரைக்கடை வியாபாரிகள் கடையின் பாதையை மறைத்தவாறு ஆக்கிரமிப்பை அகற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்த இப்ரான்சா அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமலும், கடைக்குள் சென்று வர வழி இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இது சம்பந்தமாக அந்த உணவக நிர்வாகம் திருச்சி மாநகராட்சி, கோட்டை காவல் நிலையம் என்று அனைவருக்கும் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் நியாயத்துக்காக துறை சார்ந்த அதிகாரிகள் யாருமே நேரடியாக வந்து பார்வையிடவோ, விசாரிக்கவோ எந்த நடவடிக்கையும் இந்த தவெக ஆட்சியில் எடுக்கவில்லை என்பது தான் கொடுமையான விசயம். லட்சம் லட்சமாக பணம் போட்டு திறந்த உணவகம் தள்ளுவண்டி கடைகளால் பாதிப்பு அடைந்ததை கண்ட உணவக ஊழியர்கள் ஆத்திரமடைந்து தரைக்கடை வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனை பெரிதாக, தகவலறிந்து வந்த காவல் துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் அந்த தள்ளுவண்டி வியாபாரிகள் உணவக உரிமையாளர் இப்ராம்சா மற்றும் ஊழியர்கள் மீது ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், தள்ளுவண்டி கடையை உடைத்து விட்டதாகவும் பொய்யான புகார் கொடுத்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, உணவக உரிமையாளர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையரை பொன்மணியை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது, குறிப்பிட்ட அந்த சாலைப் பகுதி நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடை திறப்பதற்கு முன்பாகவே முறைப்படி மனு அளித்தபோது தெரிவிக்காமல், பிரச்சனை முற்றிய நிலையில் எங்கள் எல்லை இல்லை என மாநகராட்சி நிர்வாகம் கைகழுவுவது நியாயமற்றது என்றும், தங்களை அதிகாரிகள் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணவக நிர்வாகத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
சாலையோர வியாபாரிகள் நலன் கருதி அரசு வெண்டிங் கமிஷன் சான்றிதழ் வழங்கி வரும் நிலையில், இங்குள்ள சில வியாபாரிகள் எந்த வித அதிகாரப்பூர்வ அட்டையோ, அல்லது அங்கீகாரமோ இன்றி சங்கம்’ என்ற பெயரில் போலி பிம்பத்தை உருவாக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கம்யுனிஸ்ட் கட்சி தொழிற்சங்கங்களின் பெயரைக் கூறிக்கொண்டு, அனுமதி இல்லாத கடைகளையும் சட்டவிரோதமாக சிலர் பணம் வாங்கி கொண்டு உள் வாடகைக்கு விடுவதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் காவல்துறையினரும் இந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளிடம் தினமும் ஒரு தொகையை மாமுல் வாங்குவதால் தான் அவர்கள் மேல் எந்த புகார் வந்தாலும் கிடப்பில் போட்டு விடுவதாகவும் வணிகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
முறையாக மனு அளித்தும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் வியாபாரிகளை காக்க, திருச்சி மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை இணைந்து உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே சத்திரம் பேருந்து நிலைய பகுதி வணிகர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது .

