தூய சக்தியாக காட்டி வரும் தவெக மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, கண்டுகொள்ளுமா தேர்தல் ஆணையம்
மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு தவெகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரம் ஆரத்தி எடுத்தவர்களுக்கு தான் பணம் கொடுத்ததாக தவெக நிர்வாகிகள் கூறினர்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் பணப்பட்டுவாடாவை தடுக்க மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தவிர்க்கவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தூய சக்தி என சொல்லிக்கொள்ளும் ஆளும் கட்சியான தவெக வாக்காளர்களுக்கு பணம் வழங்காது என வெளிப்படையாக அறிவித்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் ரெட்டிபாளையம் பகுதியில் மரகதம் குமரவேல் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் மரகதம் குமரவேலுக்கு ஓட்டு போட கூறி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் சிலர் தவெக நிர்வாகிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.அப்போது வாக்காளர்களுக்கு ரூ.500 பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெண் ஒருவர் மணிபர்சில் இருந்து மக்களுக்கு பணத்தை கொடுப்பது போன்றும், அதை வீடியோ எடுக்கும் நபர் பார்த்த உடன், இல்லை.. இல்லை.. இது ஆரத்தி எடுத்ததற்கு தான்.. பணம் எல்லாம் கொடுக்கலை.. என்றார். இதன் பிறகு அங்கு நின்ற மக்களும் கலைந்து சென்றது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவினர் தொடர்ச்சியாக தன்னை தூய சக்தியாக காட்டி வரும் நிலையில் பணப் பட்டுவாடா செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

