துறையூர் தொகுதி மக்கள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என பேனர் வைத்த துணை சபாநாயகர். தவெக வுக்கு தெரியாமல் வாக்களித்து விட்டோம் என பொதுமக்கள் வருத்தம்.
துறையூர் தொகுதி மக்கள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என பேனர் வைத்த துணை சபாநாயகர். தவெக வுக்கு தெரியாமல் வாக்களித்து விட்டோம் என பொதுமக்கள் வருத்தம்..
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் தமிழக அரசின் சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர், தனது வீட்டுக்கு பொதுமக்கள் யாரும் நேரடியாக வர வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் பேனர் வைத்துள்ள தகவல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் துறையூர் (தனி) தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ரவிசங்கர், 66,263 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ரவிசங்கர் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் என்றாலும், அவரது இல்லம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம், சக்தி நகரில் அமைந்துள்ளது. அதே பகுதியில் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், தன்னை நேரில் சந்திக்க விரும்புவோர் துறையூரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் அல்லது மண்ணச்சநல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரை சந்திக்க விரும்புபவர்கள் இனிமேல் அவரது வீட்டுக்கு நேரடியாக வர வேண்டாம் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியிருப்பது தொகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, ரவிசங்கரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை தொடர்பாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
தவெக வட்டாரத்தில் கூறப்படுவதாவது, தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் காரணமாக தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவே, வீட்டுக்கு நேரடியாக வராமல் கட்சி அலுவலகம் அல்லது எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே அவரை கட்சி நிர்வாகிகளான நாங்களே தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தினர் கூறுகின்றனர்..
எனினும், பிரச்சார நேரத்தில் தன்னை எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை பகிரலாம் என்று சொன்ன துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தற்போது பேனர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரவிசங்கர் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதனால் பேனர் வைத்து வாக்களித்த பொதுமக்களை சந்திக்க இயலாது என துணை சபாநாயகர் அறிவித்திருப்பது குறித்து துறையூர் தொகுதி மக்களிடம் கேட்டபோது ஏதாவது மாற்றம் நடக்கும் என தெரியாமல் தவெ கவுக்கு வாக்களித்து விட்டோம் என வருத்தம் தெரிவித்துள்ளனர்…

