திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் வல்லரசன். இவரது மனைவி ஜோதிகா.
இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஜோதிகாவுக்கு கடந்த 17ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாயும் சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்குழந்தைக்கு மூக்கடைப்பு ஏற்பட்டது.
உடனே ஜோதிகா குழந்தையை எடுத்துக்கொண்டு
வீரச்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடினார். பணியில் இருந்த டாக்டர் மூக்கு வழியாக செலுத்தப்படும் ஒரு சொட்டு மருந்தை எழுதிக் கொடுத்தார். மேலும்

அந்த மருந்து தங்களிடம் இருப்பு இல்லை. வெளியே வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் மெடிக்கல் ஸ்டோரில் டாக்டர் எழுதிய சொட்டு மருந்தை வாங்கிக்கொண்டு ஜோதிகா வீடு திரும்பினார் .நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை மூக்கடைப்பினால் தூங்காமல் முனகி கொண்டே இருந்தான்.
உடனே ஜோதிகா அந்த சொட்டு மருந்தை மூக்கு வழியாக செலுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது,
குழந்தை எந்த அசைவும் இல்லாமல் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. டாக்டர் எழுதிக் கொடுத்த சொட்டு மருந்தே தங்களது குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக துறையூர் காவல் நிலைய போலீசில் புகார் அளிக்க சென்றனர்.
போலீசார் சம்பந்தப்பட்ட பகுதி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு மூக்கு வழியாக மருந்து கொடுக்க டாக்டர்கள் பரிந்துரைப்பதில்லை.
குழந்தைக்கு கடுமையான பிரச்சனை இருந்த காரணத்தினால் மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை எழுதிக் கொடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என்பது தெரியவில்லை.
மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

