லால்குடியில் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை மூட 50 மேற்பட்ட பொதுமக்கள் மனு
லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் நெரிசல் மிகுந்த வழிபட்டு தலங்களுக்கு மத்தியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு .
திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாளிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள லால்குடி அகிலாண் டேஸ்வரி நகர் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த 2 கடைகளும் இந்திய அஞ்சல் நிலையம், இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, கமலக்கூத்த அய்யனார் மற்றும் ஆலடி கருப்பண்ணசாமி கோவில், இச்சடி பிள்ளையார் கோவில், திருமண மண்டபம் மற்றும் திரையரங்கு ஆகியவற்றிற்கு அருகாமையில் இயங்கி வருகின்றன. மேலும், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தினசரி பயன்படுத்தும் சுரங்கப்பாதை மற்றும் முக்கிய வழித்தடமும் இதன் அருகிலேயே அமைந்துள்ளது.
இந்த டாஸ்மாக் கடைகளில் மது அருந்தும் மதுப்பிரியர்கள் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, பெண்களுக்கு வாய்மொழி தொந்தரவு மற்றும் ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சிதறிக்கிடக்கும் மது பாட்டில்களால் பள்ளி மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மாலை நேரங்களில் பாதுகாப்பற்ற சூழலை சந்திக்கின்றனர்.
எனவே, அதிகாரிகள் மாலை நேரத்தில் நேரடியாக கள ஆய்வு செய்து, பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த 2 கடைகளையும் மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைவான பகுதிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

