காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் கைதி. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..

திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி லாரி டிரைவர் ஆக பணி புரிந்து வருகிறார்.
இவர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது.
இதற்காக தண்டனை பெற்று தற்பொழுது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் கல்லக்குடி காவல் நிலைய போலீசார் பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் பெற்ற ஒரு புகாரின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். லாக்கப்பில் வைத்து விசாரித்து வந்த நிலையில் தற்போது அவர் விஷம் அருந்தி விட்டார் என்று கூறி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும் பொழுது ஜாமினில் வெளிவந்ததை தாங்க முடியாத போலீசார் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர், அவர் தனது ஏழ்மை நிலையை கூறி பணம் தரவில்லை என்றதும் பாதிக்கப்பட்டவரின் மனைவி பெயரில் போலியான புகார் ஒன்றை பெற்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் லாக் அப்பில் விசாரணையில் இருந்த ஒருவர் விஷம் அருந்தி விட்டார் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியில் இருந்த பொழுது நடைபெற்ற இந்த சம்பவத்தால் அவர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் விஷம் அருந்தியதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

