திருச்சி சண்முகா நகர் நலச் சங்கத்தினரின் தொடர் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பூங்கா பணிகள் தொடக்கம்
அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திருச்சி சண்முகா நகர் பூங்கா பணிகள் தொடங்கியது போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரவேற்பு .

திருச்சி மாநகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி சண்முகா நகர். இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு வாசிகளுக்காக சண்முகா நகர் 6வது குறுக்கு தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 80 லட்சம் செலவில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் 2023 ல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கிடையே திமுக கவுன்சிலர் நாகராஜ் பூங்கா பகுதியில் தனக்கு நிலம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி அரசுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.
இருந்த போதிலும் பூங்கா பணிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதைத்தொடர்ந்து சண்முகா நகர் நலச் சங்கத்தினர் அதன் சட்ட ஆலோசகர் சி.முத்துமாரி ஆலோசனையின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் பூங்கா பணிகளை தொடங்க வலியுறுத்தி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு
பூங்கா நிலத்தை அளவீடு செய்து எல்லை கல் போட்டனர். தற்போது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 80 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
நீண்ட போராட்டத்துக்குப் பின் பூங்கா பணிகள் தொடங்கியுள்ளது.இது சண்முகா நகர் நலச் சங்கத்தினரின் தொடர் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனிமேலும் சுணக்கம் இல்லாமல் பணிகளை விரைந்து முடித்து பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வழக்கறிஞர் முத்துமாரி கேட்டுக் கொண்டு உள்ளார்.

