தென்னிந்திய சினிமாவின் ‘இசையரசி’ என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

90 வயதான அவர், ஓட்டுப் போடுவதற்காகவே ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்குச் சென்றுள்ளார். முன்னதாக, வயது மூப்பு காரணமாக அதிகாரிகள் தபால் வாக்கு அளிக்க அணுகியபோது, “நான் நேரில் வந்துதான் வாக்களிப்பேன்” என்று கூறி அதனை மறுத்துள்ளார்.
ஆனால், நேற்று அவர் வாக்குச்சாவடிக்குச் சென்றபோது, அவரது வாக்கு ஏற்கனவே முத்திரையிடப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறி அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது அனுமதி இல்லாமல் தனது வாக்கு எப்படி பதிவானது என்று அவர் கேள்வி எழுப்பியும், தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், “இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட நான் ஓட்டுப் போடாமல் இருந்ததில்லை; 90 வயதிலும் ஆசையாக வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற ஒரு மூத்த கலைஞருக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

