Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் ஆபாசமாக பேசி தாக்கியதால் மனம் உடைந்த தலித் இளம் பெண் தற்கொலை.நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Ad banner

மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிந்துஜா (வயது 25) என்ற இளம்பெண், திமுகவினரின் அத்துமீறல் மற்றும் அவமதிப்பு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

 

சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

 

திமுக சார்பில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ரூ.8,000 மதிப்பிலான தேர்தல் டம்மி கூப்பன்கள் விநியோகத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சிந்துஜா அங்குள்ள மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவு திமுக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அங்கிருந்த திமுகவினர் சிந்துஜாவை மிகக் கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெண்ணை, அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரைப் பொது இடத்தில் வைத்து ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த சிந்துஜா, தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 

இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், ஆத்திரமடைந்த சிந்துஜாவின் உறவினர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து திருச்சி – லால்குடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

சிந்துஜாவின் மரணத்திற்கு நேரடியாகக் காரணமான மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவு திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி முழக்கமிட்டனர். சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளையும் பணத்தையும் முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியல், எத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

போலீசார் தற்போது இந்தப் புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மண்ணச்சநல்லூர் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி தலித் மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிரான கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.