காவல்துறை ஆணையருக்கு பொதுமக்கள் நலன் கருதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடிதம் வழங்கியும்,உயிர் பலி ஏற்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் வேதனை.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களே
எங்கள் சங்கத்தின் சார்பில் எனது தலைமையில் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் என்.டி. கந்தன், U.S.கருப்பையா, கே.டி.தங்கராஜ்,
அப்துல் ஹக்கீம் ,பதுருல்லா, ஜமால் முகமது உள்ளிட்டோர்
கடந்த செவ்வாய்க்கிழமை (5.1.2026) அன்று தங்களை நேரில் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் மகேஷ் பொய்யா மொழி எழுதி கையெழுத்திட்ட கடிதத்தை தங்களிடம் வழங்கினோம்.அதில் திருச்சி காந்தி மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையை சரி செய்யும் வகையில் காந்தி சிலை மணிமண்டபம் சாலை,பழக்கடை லைன், மீன் மார்க்கெட், வாழைக்காய் மண்டி,தையல்காரர் தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் நான்கு ரோடு சந்திப்பில் இரவு பகல் நேரத்திலும் போக்குவரத்து காவல் பூத் அமைத்து ஆம்புலன்ஸ்,பள்ளி வாகனங்கள்,பொதுமக்கள் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சிரமம் ஏற்படாமல் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கி இருந்தார்கள்.அதை நாங்கள் தங்களிடம் வழங்கி கோரிக்கை வைத்தபோது ரெடிமேட் பூத் எங்களிடம் உள்ளது அதனை வைத்து உடனடியாக ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மாநகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எங்களது காந்தி மார்க்கெட் பகுதியில் இரவு பகல் போக்குவரத்து நெரிசலை திருச்சி மாநகர காவல்துறை வழக்கம் போல் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது.
கடந்த ஐந்தாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மதியம் போக்குவரத்து காவலர்களின் கண்முன்னே (காந்தி மார்க்கெட் பகுதியை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளதால்) கூலித்தொழிலாளி ஒருவர் மீது டிப்பர் லாரி இடித்து ஏறி இறங்கியதில் அந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிர் பலியான பின்பும் காவல்துறை மௌனமாக இருப்பது தான் பெரும் வேதனையாக உள்ளது.அடுத்த உயிர்ப்பலி போன்ற அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் தாங்கள் காந்தி மார்க்கெட் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தந்து மீன் மார்க்கெட் -வாழைக்காய் மண்டி நான்கு ரோடு பகுதியில் உடனடியாக ரெடிமேட் போலீஸ் பூத் அமைத்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாய் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்..

