பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.5000. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் அதிரடி திட்டம்.
வரும் 2026 பொங்கல் பண்டிகையை தலைமையிலான தமிழக அரசு, நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் சிறப்புமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை வெள்ளம் வழங்கப்படுமா என்ற கேள்வி உள்ளது. அதை பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படலாம்.
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .
இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலை காரணமாக அதிகாரிகள் சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளது. மேலும், அரசு ஏற்கனவே பல நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு மகளிர் உரிமைத்தொகையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 44 லட்சம் பெண்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் பெறப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்தார். நவம்பர் வரை இத்திட்டம் நடைபெறுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். இதற்கு இடையே பொங்கலுக்கு பணம் கொடுப்பது இன்னும் சிக்கலாக அமையும். இருப்பினும், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இரண்டு கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இதற்கு சுமார் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிற துறைகளில் இருந்து நிதியை மாற்றுவது அல்லது தற்காலிக பொருளாதார வழிகளை உருவாக்குவது போன்ற நிதி ஆதாரங்களை அடையாளம் காண விவாதங்கள் நடந்து வருகின்றன.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை, இறுதி செய்யப்பட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு நலத்திட்டமாகவும், அரசியல் ரீதியாக முக்கிய முடிவாகவும் இருக்கலாம். தி.மு.க. அரசு இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பண்டிகைக்கு நெருக்கமாக ஒரு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

