திருச்சி உலகநாதபுரம்
முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த
3 மர்ம நபர்களுக்கு வலை .
திருச்சி உலகநாத புரத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மூன்று மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ளது உலகநாதபுரம்.இங்கு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் காலை, மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும், பூசாரி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மூன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே இருந்த உண்டியலை உடைத்து சுமார் 8000 ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டனர். மறுநாள் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டு உடைக்கப்பட்டு திருடு போயிருப்பது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு பூசாரி தகவல் தெரிவித்தார். உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து திருச்சி கன்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது .இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தினர்.மேலும் கோவிலில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்தபோது, 3 மர்ம நபர்கள் வந்து கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று உண்டியலையும் உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. ‘இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

