திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு அளிக்குமாறு உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர் .உதவி ஆய்வாளராக 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது டிஎஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தொடர்ச்சியாக தான் பணி செய்ய முடியாததால் தனக்கு விருப்ப ஓய்வு வேண்டும் என உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் டிஎஸ்பி பரத் ஸ்ரீனிவாஸ். இந்த கடிதம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்பட்ட ரீதியான மன உளைச்சலா அல்லது பணிச்சுமையா என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் தனக்கு உயரதிகாரிகளால் பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.