தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் என்ற மேலகாட்டூா் கிராமத்தை சோ்ந்த தம்பதி முருகபெருமாள் (வயது 38). லாரி ஓட்டுநா். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 35). இவா்களுக்கு முத்துசெல்வம் (வயது12), செந்தில்குமாா் (வயது 9) ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.
கடந்த 2 மாதங்களாக முருகபெருமாள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாராம்.
மகாலட்சுமி வீட்டின் முன்பு கூரை அமைத்து காளான் உற்பத்தி தொழில் செய்து வந்தாா். மேலும் பூலாங்குளத்தில் தையல் கடையும் நடத்தி வந்துள்ளாா்.
இதனிடையே, வீடு கட்டவும், தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக தம்பதி ரூ. 15 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், சம்பவத்தன்று மகாலட்சுமி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, குழந்தைகள் கண்முன்னே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில் முருகப்பெருமாள் அரிவாளால் மகாலட்சுமியை வெட்டினாராம்.
இதில் மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப்பதிவு செய்து முருகபெருமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.