திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நடந்த பரிதாப சம்பவம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (வயது 22) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, ஸ்ரீராம சமுத்திரத்தில் உள்ள நண்பர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்காக குகன் வந்துள்ளார்.
அப்போது ஸ்ரீராமசமுத்திரம் காவிரி கரை அருகே உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விட்டு அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக காவிரி ஆற்றில் தண்ணீரில் குகன் மூழ்கியுள்ளார். குகனின் செல்போன் மற்றும் செருப்பு ஆகியவை ஆற்றங்கரையில் இருந்ததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று மாயனூர் கதவனை 1-வது ஷட்டரில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீராமசமுத்திரத்தில் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன குகனின் சடலம் என்பதும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உடல் அடித்து வரப்பட்டு கதவனை ஷட்டரில் சிக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. பின்னர் காட்டுப்புத்தூர் போலீசார் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.