திருச்சி அருகே கம்பரசம் பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
திருச்சி புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ராமன் (வயது 21). திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ படித்து வந்த இவா் சனிக்கிழமை மாலை தனது நண்பா்களுடன் கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்த போது சுழலில் சிக்கி மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்து அங்கு வந்த ஜீயபுரம் காவல் நிலைய போலீஸாரும், திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினரும் தண்ணீரில் மூழ்கிய மாணவரைத் தேடினா். அதன் பிறகு இரவு நேரமானதால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்காட்டுப்பள்ளி அருகே பாதிரக்குடியில் மாணவா் ராமனின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.