கொலை குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல்: போலீஸ் எஸ்.ஐ., அதிரடி கைது.
கோவை மாவட்டத்தில், மன நலம் பாதித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் பணம் மற்றும் நகையை கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ், எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெள்ளாச்சியில் சோமனுாரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த், (வயது 22.) மனநலம் பாதித்தவர். மூன்று மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, முல்லை நகரில் உள்ள, ‘யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
அப்போது, காப்பகத்தில் இருந்த வருண்காந்த், யாருடைய பேச்சையும் கேட்காமல் முரண்டு பிடித்த வந்துள்ளார். இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவுசெய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கொல்லப்பட்டவரின் சடலம், தமிழகம் – கேரள எல்லையான நடுப்புணி, பி.நாகூரில் காப்பக உரிமையாளரின் தோட்டத்தில் இருந்து, தோண்டி எடுக்கப்பட்டதோடு, பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகிகளான கிரிராம், கவிதா, லட்சுமணன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்ற நிலையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. மனநலம் பாதிக்கப்பட்ட வருண்காந்தை கம்பத்தில் கட்டி வைத்து, அரை நிர்வாணப்படுத்தி,மிளகாய் பொடி தூவியும், பச்சை மிளகாயை வாயில் திணித்தும், கொடூரமாக தாக்கியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகை மகாலிங்கபுரம் போலீஸ் எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணன் கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் குற்றவாளிகள் வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்த பணம் மற்றும் நகையை பதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், எஸ்.ஜ நவநீதகிருஷ்ணனை கைது செய்து உள்ளனர்.