திருச்சி சோமரசம்பேட்டையில் உண்மையில் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என அப்பகுதி மக்கள் சந்தேகம்
வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே சென்று விளையாடாதே என பெற்றோர் கண்டித்ததால் ஒன்பது வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை .
திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ. லோகேஷ். தனியாா் நிறுவன ஊழியரான இவரது மகள் அவந்திகா (வயது 9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். நேற்று முன்தினம் வியாழக்கிழமை முற்பகலில், வெளியே சென்று விளையாடிவிட்டு வருவதாக, சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாா். அதற்கு கடும் வெயிலாக உள்ளதால் வெளியே விளையாட செல்ல வேண்டாம் என பெற்றோா் கூறியுள்ளனா்.

சிறுமி கோபத்தில் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளாா். சிறுமி படிப்பதாக பெற்றோா் நினைத்துள்ளனா். பின்னா், வெகு நேரம் கழித்து, மதிய உணவுக்காக அவரை அழைத்தபோது சிறுமி கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் அக்கம் பக்கத்தினா், கதவை உடைத்து சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையில் ஒன்பது வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.