திருச்சி என்.ஐ.டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்திப்மீனா (வயது 21) என்ஐடியில் உள்ள விடுதியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குல்தீப் மீனா தேர்வில் அரியர் வைத்துள்ளதாகவும் இறுதி ஆண்டு முடிந்த நிலையில் ஆரியர் இல்லாமல் தேர்ச்சி பெற முடியுமா என்று சந்தேகத்தில் இருந்ததாகவும் இந்த நிலையில் அவருடன் இருந்த மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டதாகவும் குல்திப் மட்டும் விடுதி அறையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் குல்தீப் மீனா அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்து உள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அரியர் தான் காரணமா அல்லது காதல் தோல்வி போன்ற வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் துவாக்குடி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
என் ஐ டி கல்லூரி விடுதிக்குள் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என் ஐடி கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.