அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரூபாய் 10,000 கட்டாய வசூல். (முதல்வர் வருகைக்கு ரூ.20000) மருத்துவர்கள் ஆடியோ ரிலீசால் பரபரப்பு
தென்காசியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இன்று (ஏப்ரல் 11) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த அரசு விழாவிற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் 10,000 ரூபாய் வசூலிக்க உத்தரவிடப்பட்டதாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பங்குனி உத்திரத்தையொட்டி இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை இருந்தாலும், யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிகழ்ச்சியில் புதிய கட்டிடங்களைத் திறப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார் எழுந்தது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், அனைத்து மருத்துவர்களும் நிகழ்ச்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, விழா செலவுகளுக்காக 10,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அடுத்து முதலமைச்சர் வருகைக்கு 20,000 ரூபாய் கேட்கப்படலாம் என்றும் அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் புலம்பிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு டீ, காபி வாங்கிக் கொடுக்கலாம், சாப்பாடு போட முடியலன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணலாம். ஆனா 10,000 ரூபாய் எங்க சார் போய் வாங்குறது? அரசு விழாவுக்கு எதுக்கு மேடை போடணும்? மினிஸ்டருக்கு தெரியாம இப்படி பண்றாங்களா?” என்று அந்த ஆடியோவில் மருத்துவர் வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், “ஆயம்மாவுக்கு 1,000 ரூபாய் சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லைன்னு சொல்றாங்க. டிபார்ட்மெண்ட்ல ஸ்ட்ரெஸ்ஸோட வேலை பார்க்கிறோம். இப்படியே போனா என்ன சார் செய்யுறது?” என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார். இந்த வசூல் வேட்டை குறித்து அமைச்சருக்கு தெரியுமா, தெரியாதா என்பது கேள்வியாக உள்ள நிலையில், சில அதிகாரிகள் அரசு நிகழ்ச்சியை பயன்படுத்தி பணம் சேகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பான ஆடியோக்கள் ஊடங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விழாவை ரத்து செய்து உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய பொது சுகாதாரத்துறை மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் செல்வ விநாயகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.