Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இல்லாத இடத்திற்கு பட்டா வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். பட்டாவை திருப்பி கொடுத்த மாற்றுத்திறனாளி

0

'- Advertisement -

‘பட்டா கொடுத்தாங்க இடத்தை காட்டமாட்றாங்க… பல முறை மனு கொடுத்தும் பலனில்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க,’ என கூறி வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார் மாற்றுத்திறனாளி.

அசிங்கப்பட்டு.. வேதனைப்பட்டு.. வெட்கப்பட்டு.. மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வருகிறோம், மாவட்ட ஆட்சியரே இப்படி எங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்வது? பெயருக்கு அனுமந்தப்பட்டவை கொடுத்துவிட்டு, எங்களை அலைக்கழிக்கிறீர்கள்,’ என்று குமுறினார் அந்த மாற்றுத்திறனாளி.

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான முத்துக்கிருஷ்ணன். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது இலவச வீட்டு மனை அனுமந்த பட்டாவை துணை முதலமைச்சரிடமிருந்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனக்கு அனுமந்த பட்டா வழங்கப்பட்ட நிலையில், தனது பட்டா நிலத்தை நேரில் காண்பிக்க வேண்டும் எனவும், இடத்தை அளந்து கொடுக்க வேண்டி பலமுறை அரசு அலுவலகத்திற்கு அலைந்து திரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் இது குறித்து கேட்கும் போது, அமைச்சர் பரிந்துரையின் பெயரில் தான் உங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது எனக் கூறி, அதிகாரிகள் இழிவு படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

தொடர்ந்து பல முறை முறையிட்டும், கோரிக்கை வைத்தும், அலைந்தும் தனக்கான கோரிக்கை நிறைவேறவில்லை. இடத்தை காண்பிக்க கோரி பலமுறை அலைந்தும், மனு அளித்தும் பலனளில்லாததால், நேற்று திங்கட்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய பட்டாவை, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஒப்படைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன் பேசியதாவது:

”மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கண் துடைப்புக்கு தான் பட்டா வழங்கியுள்ளார்கள். அவர்களாக சர்வே நம்பர் போட்டார்கள், அமைச்சர் மூர்த்தி பரிந்துரையில் தான் எனக்கு பட்டா வழங்கியதாக அதிகாரிகள் இழிவுபடுத்துகிறார்கள்.

இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும் வரை எந்த மாற்றத்தினாளிகளுக்கும் நியாயம் கிடைக்காது. மதுரை மாவட்டத்தில் இந்த கலெக்டர் இருக்கிற வரைக்கும் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

துணை முதலமைச்சர் வழங்கிய அனுமந்தப்பட்டவை மீண்டும் கலெக்டரிடம் ஒப்படைத்தபோது, ‘ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க, திரும்ப முதலமைச்சர் வரும்போது அதே பட்டாவ திரும்ப தருவார்கள்’ என்று கூறுகிறார். இடம் 32 சர்வே எண் தேனூரில் கொடுத்துள்ளார்கள். அந்த இடம் வேற யாருக்கோ சொந்தம் எனக் கூறி வழக்கு உள்ளதாக கூறுகிறார்கள்.

இங்கு 150 தடவை வந்திருப்பேன், பேசாம பெட்டி கடை வைத்திருக்கலாம். இப்டியே போனால் கலெக்டர் ஆபீஸ்ல உட்கார்ந்து பிச்சைதான் எடுக்கணும். மாற்றுத்திறனாளிகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தான் இந்த இந்த ஆட்சியர் கொண்டு வர வைக்கிறார்.

மதுரை அரசு மருத்துவமனையில் அம்மன் உணவகத்துக்கு எல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு கடை கொடுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. என்னோட சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100பேரில் 10 பேருக்குத் தான் பட்டா கிடைத்துள்ளது. அதுவும் கண்துடைப்பு போன்று கொடுத்துள்ளார்கள்.

இதற்கு நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். மாற்றுத்திறனாளி கொடுத்த மனுக்களுக்கு நியாயம் வேண்டும். என் மீது வழக்கு வேண்டுமானால் தொடரட்டும். 15 நாள் ஜெயிலில் கூட இருந்து கொள்கிறேன். நான் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கூட வாங்க மாட்டேன். உழைத்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த அரசு மாற்றுத்திறனாளிக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளிக்கு உள்ளே அனுமதி இல்லை என போர்டே வைத்து விடுங்கள்.

அசிங்கப்பட்டு. வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு மனு அளிக்க வருகிறோம். மாவட்ட ஆட்சியரே இப்படி எங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்வது? பெயருக்கு அனுமந்தப்பட்டாவை கொடுத்துவிட்டு எங்களை அலைக்கழிக்கிறீர்கள்,” என்று கடும் சொற்களால் அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் அந்த மாற்றுத்திறனாளி குற்றம் சாட்டினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.