மேலும் 2 நகராட்சிகளை மாநகராட்சியாக உயர்த்த திட்டம். திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.
திருச்சியில் புதிய மார்க்கெட் அமைக்கப்பட்டாலும் காந்தி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு காந்தி மார்க்கெட் இடம் மாற்ற செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவதாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் 220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை , சில்லறை விற்பனை என தனித்தனியாக புதிய மார்க்கெட் திருச்சியில் அமையும் . திருச்சியில் புதிய மார்க்கெட் அமைக்கப்பட்டாலும் , மாநகரின் மையத்தில் இருக்கக்கூடிய காந்தி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படாது. காந்தி மார்க்கெட்டை சீர் செய்து , பெரிது படுத்துவதற்காக 50 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார் என்று பதில் அளித்தார்.
மேலும் பெரம்பலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 17,455 கோடியில் 23 குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபிச்செட்டிபாளையம், வாலாஜாப்பேட்டை ஆகிய நகராட்சிகளில் ரூ.38.80 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள சந்தைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னைப் பெருநகரின் மையப் பகுதியிலுள்ள மிகவும் பழமையான கழிவுநீர் கட்டமைப்புகளை புனரமைப்பதின் முதற்கட்டமாக ரூ.740.37 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.