நான் ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்தவன் . நாங்கள் நினைத்தால் தமிழகமே ஸ்தம்பிக்கும் . குடிபோதையில் கண்டக்டர் போலீஸிடம் தகராறு .
எங்கள் சங்கம் நினைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என ஸ்ரீவைகுண்டத்தில் மது போதையில் இருந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து நேற்று நள்ளிரவில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் போது ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என நடத்துனர் கிருஷ்ணகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் இருந்த பயணிகள் அவரிடம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அப்போது பயணிகளிடம் நடத்துநர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணிகள் ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு போனில் தகவல் தெரிவித்து உள்ளனர். புதுக்குடியில் பயணிகளை இறக்கிவிட்டு நேராகச் செல்ல முயன்ற அந்த அரசு பேருந்தை பொதுமக்கள் திரண்டுவந்து சிறை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து நடத்துநர் கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்ற கலெக்டர் உத்தரவை மீறக்கூடாது என இன்ஸ்பெக்டர் நடத்துநரிடம் அறிவுறுத்தி உள்ளார்.
“கலெக்டர் சொன்னால் நாங்கள் கேட்கணுமா, எங்கள் சங்கம் ( ஆளுங்கட்சி ) ஸ்ட்ரைக் செய்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்” என நடத்துனர் கூறியதை கேட்ட இன்ஸ்பெக்டர் தொடர்ந்து விசாரணை செய்தபோது, நடத்துனர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
பயணிகளின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் பணியில் இருந்த போது மது அருந்தி இருந்ததை இன்ஸ்பெக்டர் கண்டித்தபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக மது அருந்தியதாக நடத்துநர் தெரிவித்துள்ளார். உடனடியாக ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து கழகத்தினருக்கு நடத்துநர் மது அருந்தி பணியில் இருப்பது குறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போக்குவரத்து கழக பணியாளர்கள் நடத்துனர் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். அப்போது பேருந்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் திருச்செந்தூருக்கு செல்ல இருந்ததால் நள்ளிரவில் பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடத்துநரை எச்சரித்து தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
பின்னர், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பேருந்து சென்று பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து சென்றது பேருந்து. சிறப்பு பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது