சென்னை புளியந்தோப்பு போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு ‘ஈ’ ப்ளாக்கில் பெண் காவலர் செல்வி (வயது 39) என்பவர் வசித்து வந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை பூர்வீகமாக கொண்ட செல்வி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவர், சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அதே நல்லுசாமி (வயது 41) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. கடந்த 10 வருடத்திற்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் மகள் இறந்த நிலையில், மகன் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த செல்வி, நேற்று காலை 7 மணிக்கு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு போகவில்லை. இதனால் சக போலீசார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் செல்வி போனை எடுக்காததால், புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் காவலர் குடியிருப்புக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
எவ்வளவு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வி தனது துப்பட்டாவில் தலையை மாட்டிய நிலையில் இருந்த காட்சியை கண்டு ஆடிப் போனார்கள். தொடர்ந்து செல்வியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செல்வியின் கணவரான நல்லுச்சாமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து செல்வி மன உளைச்சலில் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.