ஒரு வருடமாக உல்லாசமாக இருந்து விட்டு இணை ஆணையர் மீது திடீர் பாலியல் புகார் கூறிய பெண் காவலர். இருவரும் உள்ள வீடியோவை வெளியிட்ட இணை ஆணையரின் மனைவி.
பெண் காவலர் பாலியல் புகாரில் சென்னை காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் பெண் காவலர்களுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்காசியைச் சேர்ந்த மகேஷ் குமார் 1999 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய மகேஷ் குமார், அண்மையில் ஐபிஎஸ் அதிகாரியாக அந்தஸ்து உயர்வு பெற்று, சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மகேஷ்குமார் மீது டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஒரு வாரமாக செல்போன் மூலமாகவும், நேரிலும் மகேஷ்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு பெண் காவலரும் புகார் அளித்த நிலையில், இதுதொடர்பாக விசாகா கமிட்டி தலைவர் சீமா அகர்வால் நடத்திய விசாரணையில், மகேஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, காவல் இணை ஆணையர் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மாதவரத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் மகேஷ் குமாருக்கு உடந்தையாக இருந்ததாகவும், இதனால், சக்திவேல் மீதான 40-க்கும் மேற்பட்ட புகார்களை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்பாமல் இணை ஆணையர் மகேஷ் குமார் மறைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுள்ளார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாலியல் புகாரில் பணியிடை நீக்கத்திற்கு ஆளான இணை ஆணையர் மகேஷ் குமார் வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பமாக அவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண் காவலர்களுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட காவல் இணை ஆணையர் மகேஷ்குமாரின் மனைவி அனுராதா, தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கும் தனது கணவருக்கும் ஓராண்டாக தொடர்பு இருப்பதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “பெண் காவலருக்கு என் கணவருக்கும் கடந்த ஓராண்டாக தொடர்பு இருப்பது தெரிந்து இருவரையும் நான் பலமுறை கண்டித்துள்ளேன். இத்தனை நாட்களாக அந்த பெண்ணுக்கு தேவையானவற்றை, என் கணவர் வாங்கி கொடுப்பார். தற்போது அப்பெண் வீடு கட்டி வருகிறார். அதற்கு பெரிய தொகை ஒன்றை கேட்டுதான் தற்போது மிரட்டி வருகிறார். நாங்கள் நேர்மையான அதிகாரிகள். எங்களிடம் 25 லட்சம் கேட்டால் எங்கே செல்வது. தவறாக என் கணவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொடுத்துள்ளனர்” என்று அனுராதா தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஹோட்டலில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்து விட்டு வெளியே வந்ததற்கான வீடியோ ஆதாரத்தையும் அனுராதா காண்பித்தார். மேலும், ஒரு தரப்பில் மட்டும் விசாரித்து விட்டு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அனுராதா கவலை தெரிவித்தார்.