திருச்சி சிவா வீட்டை தாக்கிய கவுன்சிலர் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் 5 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து. இன்று முதல் திமுக கட்சி உறுப்பினர்களாக செயல்பட அனுமதி. பொதுச் செயலாளர் அறிவிப்பு.
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டை தாக்கிய திமுக கட்சியினர் மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை கைவிட்டுள்ளது.
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் வீடு, கண்ட்டோன்ட்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் அமைந்துள்ளது.
திருச்சி சிவாவின் வீட்டருகே, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நவீன இறகுப் பந்து மைதானத் திறப்பு விழா கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது.
அமைச்சர் கே.என்.நேரு அந்த விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். திறப்பு விழா அழைப்பிதழில் சிவாவின் பெயர் அச்சிடப்படவில்லை. இதனால் உணர்ச்சி வசப்பட்ட சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் கே.என்.நேருவின் காருக்கு கருப்பு கொடி காட்டினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.மேலும், அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் சென்று தகராறில் ஈடுபட்ட மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலருமான முத்துச்செல்வம் , பகுதி செயலாளரும் கவுன்சிலருமான காஜாமலை விஜி, கவுன்சிலர் ராமதாஸ் , அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் மற்றும் திருப்பதி உள்ளிட்ட திமுகவினர் போலீஸாரை மிரட்டினர். இச்சம்பவம் குறித்து திருச்சி அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, இசசம்பவத்தில் ஈடுபட்ட, மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், பகுதிச் செயலாளர் காஜாமலை விஜய், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் துரைராஜ், கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, திமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘இவர்கள் அனைவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதி அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கிய கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு ( இவர்கள் அனைவரும் எப்போதும் போல் கட்சி உறுப்பினர்களாக அந்தந்த பொறுப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாலும் ) இன்று முதல் அவர்கள் கட்சி உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது,’ என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கே.என். நேரு ஆதரவாளாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .