இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழ்க கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தனியார் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் திறப்பு விழாவுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது :-
அனைத்து கிராமப்புறங்களிலும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆனால் அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. இளைஞர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும்.
தமிழ்நாட்டில் பிறந்த வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன். குறிப்பாக கேப்டன்கள் கோலி, வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். தோனி தலைமையில் இதுவரை விளையாடியது இல்லை.
இந்திய அணி கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது குறித்த கேள்விக்கு?
விளையாட்டில் ஏற்றத் தாழ்வு இருப்பது சகஜம். தற்போது சில வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். அவர்கள் அடுத்தமுறை ரன் அடிக்கும் பொழுது அதை பெரிதாக பேசுவார்கள். சில போட்டிகளில் தோல்வியடைவது நம் கையில் இல்லை. இரண்டு தொடர்களில் தோல்வியடைந்ததை வைத்து நாம் எதுவும் கூற முடியாது.
அஸ்வின் ஹிந்தி மொழி குறித்து கருத்து கூறியுள்ளார், அதற்கு உங்களது கருத்து குறித்த கேள்விக்கு நடராஜன் இந்த கேள்வி வேண்டாம் ப்ளீஸ் எனக் கூறினார் .
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பீர்களா என்ற கேள்விக்கு?
கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் பல திறமையான வீரர்களை உருவாக்கி வருகிறது . தமிழ்நாடு பிரீமியர் லீகில் சிறப்பாக விளையாடியதால் தான் நான் இந்திய அணிக்கு தேர்வானேன்.
கிராமத்தில் இருந்து வந்த நான் இந்திய அணியில் தேர்வானதே பெரிய சாதனைதான். இனி வரும் காலங்களில் கிராமத்து இளைஞர்கள் நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்பதற்காக எனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து கொடுத்துள்ளேன். நிறைய மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்தார்.