உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தது அவசர கதியில் எடுத்த முடிவு. திமுகவில் பலருக்கு அதில் உடன்பாடில்லை” என்று திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், இந்தச் செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்களே விளக்கம் அளித்துள்ளன.
திமுக செயற்குழு கூட்டம் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் அம்பேத்கர் பற்றி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு கண்டனம், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் செயற்குழு கூட்டத்தில் திருச்சி சிவா உள்ளிட்ட 36 செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். பின்னர் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்றும், அதற்காக கட்சியினர் உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பரவும் செய்தி
இந்நிலையில், திமுக செயற்குழுக் கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்தது போல ஒரு செய்தி கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ‘துணை முதல்வர் பதவி – உடன்பாடு இல்லை’ என்ற தலைப்பில் மாலை முரசு, தந்தி டிவி ஆகிய ஊடகங்கள் வெளியிட்டதாக நியூஸ் கார்டுகள் வைரலாக பரவின
அதில் “உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது அவசரகதியில் எடுத்த முடிவு. கட்சியில் பலருக்கு அதில் உடன்பாடில்லை. – அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேச்சால் சலசலப்பு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
செய்தி ஊடகங்கள் மறுப்பு
ஆனால், தந்தி டிவி மற்றும், மாலை முரசு டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. அதோடு, தந்தி டிவி, இந்த போலியான நியூஸ் கார்டினை பகிர்ந்து, “இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்!” எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல, மாலைமுரசு டிவியின் சமூக வலைதள பக்கத்திலும், “இந்த செய்தியை மாலைமுரசு வெளியிடவில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.