Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குடி போதை பழக்கத்தால் சண்டை: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயது மனைவியை தேடி தவித்து வரும் கணவன்.

0

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமு என்பவரை சஞ்சா என்ற பெண் காதல் திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணம் ஆனது முதலே அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதை ராமு வழக்கமாக வைத்திருந்தாராம்.

இதனால் காதல் திருமணம் சஞ்சாவுக்கு கசந்துள்ளது. அடிக்ககடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தி அடைந்த இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர். அதன்பின்னர் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பகுதியை சேர்ந்த 27 வயதாகும் ராமு, கொத்தனார் வேலை செய்து வருகிறார். ராமு கடந்த ஓராண்டிற்கு முன்பு வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் சஞ்சா என்பவரை காதலித்து கல்யாணம் செய்துள்ளார். ராமுவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாம். தினந்தோறும் ராமு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ராமுவை இப்படியே தினமும் குடித்துக் கொண்டிருந்தால் எனது தாயார் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறி தைராய்டு நோய்க்கான மாத்திரையை சாப்பிட்டாராம்.

இதையடுத்து அன்று இரவு 11 மணியளவில் மீண்டும் ராமு-சஞ்சா இருவருக்கும் தொடர்ந்து தகராறு முற்றியதையடுத்து தனது தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சஞ்சா புறப்பட்டு அங்குள்ள வசிஷ்ட நதிக்கரை வழியாக நடந்து போயிருக்கிறார். சஞ்சா பின்னாலேயே ராமு போனாராம். இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வசிஷ்ட நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அப்போது மனைவியின் பின்னால் சென்ற ராமு, தாயார் வீட்டிற்கு நீ சென்றால் அருகில் உள்ள ஆற்றில் குதித்து விடுவேன் என்று சஞ்சாவிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மனைவி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமு திடீரென வசிஷ்ட நதியில் குதித்துள்ளார். கணவன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை கண்ட காதல் மனைவி சஞ்சா தானும் ஆற்றில் குதித்திருக்கிறார். கரைபுரண்டு ஓடிய ஆற்றுநீரில் இருவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

ராமு தண்ணீரில் அடித்து சென்ற போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை பிடித்து கொண்டு தன்னை காப்பாற்றுங்கள் என கத்தியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுதாரித்து கயிறு கட்டி ஆற்றுக்குள் மின் கம்பத்தில் போராடிக்கொண்டு இருந்த ராமுவை மீட்டனர். ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சஞ்சாவை அவர்களால் மீட்க முடியவில்லை. அதன்பிறகு நேற்று அதிகாலை முதல் வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சஞ்சாவை தொடர்ந்து தேடினர்.

நேற்று இரவு வரை அவரை கண்டுபிடிக்கவில்லை. அவருடைய கதி என்ன? என்று தெரியவில்லை.

காதல் கல்யாணம் செய்த ஒரு ஆண்டில் கணவன்- மனைவி சண்டையால், ஆற்றில் குதித்த கணவர் மீட்கப்பட்ட நிலையில், அவரது பின்னால் குதித்த காதல் மனைவி கதி என்ன? என்று தெரியாமல் சேலம் வாழப்பாடி பகுதியில் உறவினர்கள் சோகத்தில் தவிக்கிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

Leave A Reply

Your email address will not be published.