தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் தற்பொழுது அரையிறுதில் இரண்டு தமிழக அணிகள் விளையாடி வருவது சிறப்பு.
ஒரு அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவன் அணி சத்தீஸ்கர் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இன்னொரு அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிரசிடெண்ட் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் முதல் தமிழக அணி பலமானதாகவும் அடுத்த தமிழக அணி இளம் வீரர்களை கொண்ட அணியாகவும் இருக்கிறது.
முதல் அரையிறுதி
இந்த போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவன் அணியின் கேப்டனான சாய் கிஷோர் துலீப் டிராபி விளையாட சென்றுவிட்டார். இந்த நிலையில் பிரதோஷ் ரஞ்சன் பால் கேப்டனாக இருக்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற சட்டீஸ்கர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் அணி இரண்டாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் குவித்து இருக்கிறது. அந்த அணியின் தரப்பில் ஆயுஷ் பாண்டே 82, அனுஜ் திவாரி 93, பிரடிக் யாதவ் 109 ரன்கள் எடுத்தார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவன் பந்துவீச்சில் அஜித் ராம் மற்றும் லக்சய் ஜெயின் தலா நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த தொடரில் போட்டிகள் நான்கு நாட்கள் கொண்டவையாக இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களில் சத்தீஸ்கர் அணியை விட ஒரு ரன் கூடுதலாக எடுத்தால் மட்டுமே சாய் கிஷோரின் அணி இறுதிப் போட்டிக்கு வர முடியும்.
இரண்டாவது அரையிறுதி
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிரசிடென்ட் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியும் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு கிமா தேஜா 91, நிதேஷ் கண்ணலா 59, சிவி மிலின்த் 59 ரன்கள் எடுத்தார்கள். பந்துவீச்சில் கேப்டன் எம்.சித்தார்த் மற்றும் முகமது இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிரசிடெண்ட் அணி இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்திருக்கிறது. ரித்திக் ஈஸ்வரன் 83, விமல் குமார் 75 ரன்கள் எடுத்தார்கள். இந்த போட்டியில் எப்படியும் தமிழ்நாடு கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்று தெரிகிறது. போட்டி டிரா ஆனால் கூட இந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.