பெங்களூரில் சொகுசு கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை தொடர்ந்து திருடி வந்த ராம்ஜிநகர் கொள்ளையர்கள் அதிரடி கைது .
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்களை குறிவைத்து அவற்றின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பொருட்களை திருடும் கும்பலால் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் அச்சம் நிலவியது.
இதனையடுத்து பெங்களூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது, கார்களின் கண்ணாடிகளை உடைத்து திருடும் தமிழ்நாட்டின் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
திருச்சி ராம்ஜிநகர் என்றாலே வட இந்திய போலீசாருக்கு அவ்வளவு குலைநடுக்கம். ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடிகள்தான் தமிழ்நாட்டின் திருச்சி ராம்ஜிநகரில் அரசால் குடியேற்றப்பட்டனர். திண்டுக்கல்- திருச்சி சாலையில் இந்த ராம்ஜி நகர் இருக்கிறது.
வட இந்திய மாநிலங்களுக்கு சென்று கும்பல் கும்பலாக திருடுவதில் கை தேர்ந்தவர்கள் ராம்ஜி கொள்ளையர்கள். வட இந்தியாவில் திருடி, கொள்ளையடித்து திருச்சி ராம்ஜி நகரில் பிரம்மாண்ட பங்களாக்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் இந்த ஆந்திரா கொள்ளையர்கள்.
திருச்சி ராம்ஜிநகரை விட்டு கொள்ளையடிக்கப் போகும் போது நல்ல நேரம்,. பூஜைகள் எல்லாம் செய்கிற, ‘திருடுவது’ சிறக்க வேண்டும் என்பதற்காகவே வழிபடுகிறவர்கள்தான் இந்த ராம்ஜி நகர் கொள்ளையர்கள்.
கர்நாடகா மாநிலத்திலும் திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள் முகாம் போட்டு ‘கைவரிசையை’ காட்டி வருகின்றனர். இந்திரா நகர் போன்ற பணக்காரர்கள் வசிக்கும் இடங்கள்தான் திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்களின் டார்கெட். இந்த பகுதியில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்களை மட்டும் குறி வைக்கின்றனராம். சொகுசு கார்களின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பொருட்களை அசால்ட்டாக திருடிவிட்டுச் சென்றுவிடுகின்றனராம். இந்த திருட்டு தொடர்பாக இந்திரா நகர் பகுதியில் இருந்து ஏராளமான புகார்கள் வர பெங்களூர் போலீசார் உஷாராகி இருக்கின்றனர்.
அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில்தான் கார்களின் கண்ணாடிகளை உடைத்து திருடிய 4 பேர் வசமாக சிக்கினர். இவர்களிடம் விசாரித்த போதுதான் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என தெரியவர பெங்களூர் போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான லேப்டாப்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டிருக்கும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர் கூட்டம் தொடர்பாகவும் பெங்களூர் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.