Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியா முழுவதும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ராம்ஜிநகர் கொள்ளையனை கைது செய்த தனி படை போலீசார் .

0

பெங்களூருவைச் சேர்ந்த நித்யா(48). இவர் அங்குள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 27-ம் தேதி தனது கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். பின்னர் அடையாறு பேருந்து நிலையம் பின்புறம் காரை நிறுத்திவிட்டு இருவரும் அருகில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்றனர்.

திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கைப்பை திருடப்பட்டு இருந்தது. அதற்குள் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரொக்கம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட மேலும் சில ஆவணங்கள் இருந்தன.

இத்திருட்டு தொடர்பாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதில், திருச்சி, ராம்ஜி நகர் கொள்ளையர்களின் கைவரிசை என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விரைந்து திருச்சி வந்து ராம்ஜி நகரை சேர்ந்த பிரதீப் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி உதயகுமார் (39) என்பவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”கைதான பிரதீப் டிப்ளமோ படித்தவர். இவர் மீது தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை, ஹைதராபாத் என இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் திருட்டு தொழிலை கடந்த 19 ஆண்டுகளாக செய்து வருவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.