திருச்சி பொன்னகா், செல்வநகா் காமராஜபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 16 ஆம் தேதி பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து, நேற்று காலை காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம், தீா்த்தக் குடம் எடுத்து வரும் விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள், பால்குடம், தீா்த்தக்குடங்களை எடுத்து வந்தனா். முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோயிலை வந்தடைந்தனா். இதையடுத்து கோயிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு கருமண்டபம் கோரை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து, மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லாக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இன்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பிற்பகல் மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. ஜூன் 25-இல் சந்தனகாப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜையும், மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனா்.