கோவையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நன்றாக படித்த பட்டதாரியான சிவக்குமார் பல திறமைகளை கொண்டவர். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்..
ஆனாலும், கடந்த 2004ம் ஆண்டு கேரளாவில் ஒரு கொலை வழக்கில் கைதானார்.அந்த வழக்கின் விசாரணையை சிவக்குமார் நேரடியாக எதிர்கொண்டார். ஆனால், மறுபடியும் வேளச்சேரியில் 2012ம் ஆண்டு, தன்னுடன் தங்கியிருந்த ஏழுமலையை கொலை செய்துவிட்டு, புழல் சிறைக்கு போய்விட்டார்.
இதனிடையே கேரள கொலை வழக்கில் சிவக்குமார் குற்றவாளி என்று 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது.. ஆனாலும், 6 மாதங்களில் கன்னூர் மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்துவிட்டார்.. அதுமட்டுமல்லால், சிவக்குமாரின் பேச்சுத்திறமையும், சிறை அதிகாரிகளிடம் பெற்ற நன்மதிப்பும் இவரை சீக்கிரமாகவே பரோலில் வெளிவர காரணமாக இருந்தது.
ஆனால், கிண்டி கொலை வழக்கு விசாரணைக்கு சிவக்குமார் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு 2020ல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இப்படி கேரளா, சென்னை என மாநில வாரியாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிவக்குமார், காவல்துறைக்கு எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்தார். பரோலில் வந்து 4 ஆண்டுகள் ஆனபோதும், தமிழக – கேரள போலீசாருக்கு தலைமறைவாவே இருந்து குடைச்சலை தந்து கொண்டிருந்தார்.. சிவக்குமார் எங்கே இருக்கிறார் என்றே யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை..
சிவக்குமார் எங்குமே ஒருஇடத்தில் தங்கி வேலை பார்க்காததும், அடிக்கடி சிம்கார்டுகளை மாற்றிக்கொண்டேயிருந்ததாலும், அவரை பிடிப்பதே போலீசாருக்கு சவாலாக இருந்துள்ளது. அதனால்தான், சென்னை காவல்துறை தீவிர குற்றத்தடுப்புபிரிவு தலைவர், காவல் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம், சிவக்குமாரைப் பிடிக்க சிறப்புக் கவனம் செலுத்தியபடியே இருந்தார்..

அவரது வீட்டில் சென்று விசாரித்தால், சிவக்குமாரை பார்த்து பல வருஷம் ஆகிவிட்டதாகவும், மகள் கல்யாணத்துக்குகூட வரவில்லை என்றும் சொன்னார்கள். இந்த தகவலை போலீசார் உறுதிபடுத்தி கொண்டனர் என்றாலும், சிவக்குமாரின் மனைவியின் பல்வேறு வங்கிக்கணக்குகளை ஆராய்ந்து பார்த்தனர்.
அப்போதுதான், பெங்களூருவில் இருக்கும் வங்கியிலிருந்து அடிக்கடி மனைவியின் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அந்த பகுதிக்கு சென்ற போலீசார், சிவக்குமாரின் போட்டோவை காட்டி விசாரித்தனர்.
ஈரோட்டில் உள்ள ஓட்டலில் சிவக்குமார் தற்போது, கேஷியராக வேலை பார்த்து வருவது போலீசுக்கு தெரியவந்தது.. ஆனால், உடனடியாக சிவக்குமாரை போலீசார் கைது செய்யவில்லை. இதற்காக மாஸ்டர் பிளான் ஒன்றை கையில் எடுத்தனர்.
மதுரை ஸ்டைலில் பரோட்டா செய்ய தெரிந்த போலீஸ்காரர் ஒருவரை, சிவக்குமார் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு அனுப்பியிருக்கிறார்கள. தன்னை ஒரு பரோட்டா மாஸ்டர் என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த ஓட்டலில் வேலை வேண்டும் என்று கேட்டாராம் போலீஸ்காரர். அப்போதுதான், சிவக்குமாரிடம் நெருங்கி பழகியிருக்கிறார்.
நேரம் பார்த்து போலீசாரையும் ஓட்டலுக்கு வரவழைத்து சிவக்குமாரை கைது செய்ய வைத்துள்ளார். இதில் கொஞ்சம் பிளான் மிஸ்ஸாகியிருந்தாலும், சிவக்குமாரை பலவருஷத்துக்கு பிடித்திருக்க முடியாது என்கிறார்கள் போலீசார்.
ஆனால், சிவக்குமாருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லையாம்.. மிகவும் ஒழுக்கமாக இருப்பதை பார்த்துதான், இவருக்கு நிறைய பேர் ஓட்டல்களில் வேலை தந்துள்ளனர்.. எந்த ஓட்டலில் வேலை பார்த்தாலும், சிவக்குமாரை உரிமையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிடுமாம்.. இந்தியை சரளமாக பேசுவதால், ஓட்டல்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை வேலைவாங்குவதில் சிறந்து விளங்கியிருக்கிறார்.
சிம்கார்டு: மனைவியிடம் பேசுவதற்கு சிவக்குமார் தனியாக ஒரு சிம்கார்டு வைத்திருக்கிறார்.. பல நேரங்களில் கணவன்-மனைவி சந்தித்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
எப்படியோ, இருமாநில போலீசுக்கும் தண்ணி காட்டி கொண்டிருந்த குற்றவாளியை பிடிக்க, மதுரை பரோட்டா முக்கிய பங்காற்றியிக்கிறது.