தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி எஸ். சூர்யா பா.ஜ.க-வில் இணைந்து, அவருடைய கருத்துகள் அவ்வப்போது கட்சிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. ஏற்கெனவே, ஒருமுறை திருச்சி சூர்யா பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இணைந்தார். அதே போல, பா.ஜ.க-வின் சிந்தனையாளர் பிரிவின் மாநில செயலாளர் கல்யாணராமன் எதிர்க்கட்சிகள் மீது சமூக வலைதளங்களில் வைத்த கடுமையான விமர்சனங்கள் மூலம் சர்ச்சை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைமையைப் பற்றி ஆதாரமின்றி அவதூறு பரப்பியதாகவும் களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி, திருச்சி சூர்யா, கல்யாணராமன் இருவரும் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க-வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் ஆர்.எம். சாய்சுரேஷ் குமரேசன் நேற்று புதன்கிழமை (ஜூன் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என்று அறிவித்துள்ளார்.
அதே போல, பா.ஜ.க மாநில அலுவலக செயலாளர் எம். சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பா.ஜ.க-வின் சிந்தனையாளர் பிரிவின் மாநில செயலாளர் கல்யாணராமன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, மாநில தலைமையினைப் பற்றியும் கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.
இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி, கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கி வைக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என்று அறிவித்துள்ளார்.
சூர்யா சிவா சமீபத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் நீங்கள் மாநில தலைவராக இருந்தபோது ஒருவர் கூட கட்சியில் இணையவில்லை , நீங்கள் சொல்வது போல் பாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை.
மாநிலத் தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசும் திமுகவை நீங்கள் எதுவும் சொல்லாததால் நீங்கள் திமுக ஆதரவாளர் ஒன்று தோன்றுகிறது என கூறி இருந்தார். இது நேற்று நடைபெற்ற பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னரே இந்த நீக்கம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது .