ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு தூண்டுதலாக இருந்த வாலிபர் பக்ரீத் கொண்டாட இந்தியா திரும்பிய போது கைது.
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினரை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் ஷிராசி தாலுகாவின் தாசனகோப்பா கிராமத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினரான அப்துல் ஷகூர்(வயது 32) என்ற இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சமூக வலைதளங்களில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துபாயில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்திற்காக தாசனகொப்பிற்கு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் மதவெறியை உருவாக்கும் வகையில் பதிவிட்டதாக அவரை பனவாசி காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் என்ஏஐ அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, குக்கர் குண்டுவெடிப்பு, ஷிமோகாவில் மசூதி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுவெடிப்புக்கு தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலி பாஸ்போர்ட் மற்றும் ஆன்லைனில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ஷகூரை மறைவான இடத்தில் வைத்து அதிகாரிகள், விசாரித்து வருகின்றனர்.