விஜயபாஸ்கர் படத்துடன் பிளக்ஸ் வைத்ததால் திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியை தூக்கிய அமைச்சர் கே என் நேரு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முடிவற்றது .
அரசு சார்பிலான நிகழ்ச்சி என்றாலும் வீரர்களுக்கு உணவு தங்குமிடம் மற்றும் விளம்பர செலவுக்காக பல்வேறு நபர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டிருந்தது . அந்த வகையில் காவேரி மருத்துவமனை உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்திருந்தனர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு தனது சி.விஜயபாஸ்கர் ஸ்போர்ட்ஸ்(CVB) அகாடமி மூலம் நன்கொடை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சியில் பல்வேறு பகுதிகளிலும் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழியில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை எடுத்து பரவ விட்டனர்.
இந்த நிலையில் இந்த தகவல் குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் மூத்த திமுக நிர்வாகியுமான கேஎன் நேருவுக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் கோபமாக பேசி உள்ளார். மேலும் திருச்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை ஏன் வைத்தீர்கள்? அதற்கு அனுமதி கொடுத்தது யார்? என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துள்ளனர்.
அவரை சமாதானம் செய்த நிலையில் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சிலர் பேனர்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்தும், சாய்த்தும் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு போட்டி நடைபெற்றது. திமுக ஆட்சி நடக்கும் நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரின் பேனர்கள் திருச்சியில் வைக்கப்பட்டிருந்தது திமுகவினரை கோபத்தில் உள்ளாக்கியதோடு அதிமுகவினரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
போட்டி நடக்கும் நிலையில் இங்கு இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரது ஆதரவாளர்களோ கட்சி சார்பாக பேனர்கள் வைக்கவில்லை. இதனால் திமுகவினரையும் அமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாக திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்ய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்சியில் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது அவர்களும் அதையே கூறினர். ஆனால் வெளிப்படையாக அது காரணமாக காட்டப்படவில்லை என்கின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவத்தின் காரணமாகமே திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக விளையாட்டு ஆணைய விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு பேனர் வைத்ததற்காக ஒரு மாவட்ட அதிகாரியையே தூக்கி உள்ளார் அமைச்சர் கே என் நேரு என்கின்றனர் அதிமுகவினர்.