திருச்சி ரயில் நிலையத்தில் மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட பெண்களுக்கு அபராதம் .
சமீப காலமாக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் கூட கவர்ச்சியாக நடனமாடியும், நடந்து செல்வோரை மிரட்டுவதுபோலவும் காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி கவலைப்படுவதில்லை.
குறிப்பாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை அள்ளுவதற்காக எல்லை மீறிய வீடியோக்களை இளம்பெண், இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த இளம்பெண்கள் உடலை கவ்விப்பிடிக்கும் ஜீன்ஸ், பனியன் உடை அணிந்து உடலை வளைத்து நெளித்து, ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க கவர்ச்சிகரமாக ஆடியுள்ளனர்.

இந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது. இதை பார்த்து நெட்டிசனகள் சிலர் ரசித்தாலும், பலரும் கண்டனம் தெரிவித்து கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் படம் எடுக்க முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு அனுமதியும் இன்றி இப்படி கவர்ச்சி நடனத்தை எடுத்து வெளியிட்டது குற்றம். இதனால், ரயில் நிலையத்தில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டது எப்படி என்று ரயில்வேக்கு பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து அந்த வீடியோவை இளம்பெண்கள் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அனுமதியின்றி மக்கள் கூடும் பொது இடத்தில் கவர்ச்சி நடமனடியதாக சர்ச்சையானது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசார் கூறுகையில், ‘இந்த சம்பவம் கடந்த 6ம் தேதி நடந்தது. வீடியோ வெளியிட்ட பெண்கள் திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர்கள். அவர்கள் மூவரும் அங்குள்ள நடன பள்ளியில் நடனம் பயின்றது வந்தது தெரிந்தது.
இதையடுத்து, 3 பேருகும் ரூ.1120 அபராதம் விதித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்’ என்றனர்.