திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே தாயனுாரை சேர்ந்தவர் வைரமணி,(வயது 37). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து, அருள்வாக்கு சொல்லி வந்தார்.
இவரது உறவினர் பழனியாண்டி, 55. இவர் அதே கோவிலின் முன்பு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணியளவில், மதுபோதையில் இருந்த வைரமணி, சாமி வந்தது போல பழனியாண்டி வீட்டுக்கு சென்று, அவரை தோஷம் கழிப்பதாக கூறி அழைத்து வந்துள்ளார். கோவிலுக்கு வந்த பழனியாண்டியை படுக்க வைத்து, அவரது கழுத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து, அதை அறுப்பது போல கழுத்தையும் சேர்த்து அறுத்துவிட்டார்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள், வைரமணியை பிடித்துக் கொண்டு, பழனியாண்டியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
வைரமணியை அங்கிருந்தவர்கள் தாக்கியதில், அவரும் காயமடைந்து, போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.